Monday, February 11, 2008

தமிழ் திரைப்பட வரலாற்றில் சாதனை இயக்குநர்கள் 1931 - 1965

'தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை இயக்குநர்கள்' என்கிற இந்தப் புத்தகத்தின் தலைப்பே உள்ளடக்கத்தையும் புரியவைத்து விடுகிறது!. தமிழின் முதல் பேசும் படத்தை (1931) இயக்கிய எச்.எம்.ரெட்‌டீயில் துவங்கி, ' காவல் தெய்வம் ' படத்தை இயக்கிய (1969) டைரக்டர் கே.விஜயன் வரை, சாதனை இயக்குநர்கள் பலரைப் பற்றிய தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களின் புகைப்படங்களுடன், அந்தக் கால தமிழ்ப் படகளின் அபூர்வ ஸ்டில்களையும் தேடிக் கண்டுபிடித்துச் சேர்த்து இருப்பது பிரமிக்க வைக்கிறது.

இதில் விட்டுப்போன பல இயக்குநர்களைப் புத்தகத்தின் இறுதியில்
பட்டியலிட்டிருக்கிறார் தொகுப்பாசிரியர் வரிசை கி.ராமசந்திரன். இவர்களை பற்றியும், இந்த பட்டியலில் விட்டுப்போன இன்னும் சிலரைப் பற்றியும் கூடத் தகவல்கள் சேகரிக்கும் பணியில் ஈடு பட்டிருக்கிறாராம் ராமசந்திரன். சினிமா ஆர்வலர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயம் இது.
- ஆனந்த விகடன்

தமிழ் சினிமா இது வரை முதல் பேசும் படத்திலிருந்து என்னென்ன இடர்பாடுகளையும் வளர்ச்சிகளையும் வரலாறு ஆக்கியிருக்கிறது என்பதனை இப்புத்தகத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. மொழி இன பேதமின்றி நமது முன்னோடிகள் ஆற்றியுள்ள பணிகளை திரைப்பட ஆர்வலர்களும் மற்றவர்களும் தெரிந்துக்கொள்வது அவசியம். மனித வாழ்க்கை பல உன்னதங்களை கொண்டுள்ள மாதிரி நமது தமிழ் சினிமா வரலாற்றிலும் பல உன்னதங்கள் நிகழ்ந்துள்ளன. இப்புத்தகம் தமிழ், வரலாறு, இயக்குநர்கள் மூன்றையுமே உள்ளடக்கியதாக உள்ளது.
தமிழ் சினிமா ஒவ்வொரு நிலையிலும் அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தொழில் நுட்பத்திலும் பல விதமான மாறுதல்களை அடைந்திருக்கிறது.

சமூகப்பொறுப்புடன் இயங்குபவன்தான் கலைஞனாக முடியும். அதுவும் திரைப்படம் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான கலையாக இருக்கும் பட்சத்தில் சமூக சிந்தனையுடனும் பொறுப்புடனும் இயங்குபவனுக்குத்தான்
தன்னை திரைப்பட கலைஞன் எனச் சொல்லிக்கொள்ள தகுதியும் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு எத்தனையோ முன்னோர்கள் தங்கள் பொருளாதாரத்தையும் உழைப்பையும் கொடுத்து வளர்த்தது போக சில அரிதான சிந்தனையாளர்களும் சமூக நோக்கில் அவ்வப்போது தமிழ் சினிமாவை வளர்த்திருக்கிறார்கள் .

1919 லிருந்தே தமிழ் நாட்டில் சினிமா உருவாக்கப்பட்டு வந்தாலும் அது அடையாளத்தை எடுத்துக் கொண்டது தமிழ் மொழியை உச்சரித்ததினால்தான். இப்போதும் கூட நாம் தமிழைப்பேசும் வரைதான் தமிழர்கள் . தமிழை பேசும் வரைதான் இது தமிழ்நாடு. தமிழை பேசும் வரைதான் அது தமிழ் சினிமா. 1931ம் ஆண்டுதான் தமிழில் முதல் பேசும் சினிமா படைக்கப் பட்டதால் தமிழ்
சினிமாவின் வயது அவ்வாண்டிலிருந்து கணக்கிலெடுக்கப்பட்டுள்ளது.

1965இல்தான் தமிழ் சினிமாவின் தீவிர சினிமா உருவானது. அது வரை படைக்கப் பட்ட படங்கள் பொழுது போக்கிற்காக மட்டும் உருவாக்கப் பட்டதாக இருந்தாலும் சுதந்திர வேட்கையை கிளரச் செய்து மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டின. கதை சொல்லும் போக்கில் சமூக பிரச்னைகளையும் முன் வைத்தன. கதாநாயகர்களை முன் வைத்து படமாக்கப்பட்ட படங்களுக்கு நடுவே இந்த நேரத்தில்தான் தீவிர சினிமாவுக்கான அடையாளங்களோடு முயற்சி செய்யப்பட்ட படம் 'உன்னை போல் ஒருவன்' .எழுத்தாளர் ஜெயகாந்தன் தன்னுடைய ஒரு நாவலை யேயே திரைப்படமாக்கி எவ்வளவு இயக்குநர்கள் இருந்தாலும் முதல் முறையாக தீவிர சினிமாவை தமிழகத்தில் அறிமுக படுத்திய இயக்குநர் என்கிற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.

'தமிழ் திரைப்பட வரலாற்றில் சாதனை இயக்குநர்கள் :1931-1965' எனக் குறிக்கும் விதத்தில் உணர்த்துபவை : எந்தெந்த ஆண்டுகளில் எந்தெந்த இயக்குநர்கள் தங்களின் முதல் படைப்பை படைத்தார்களோ அதன் படி அவர்களின் பெயரோடு ஆண்டும் பங்கெடுத்து கொள்கிறது.
- தங்கர் பச்சான்

No comments: