Saturday, February 2, 2008

உலகப் புகழ் பெற்ற திரை நட்சத்திரங்கள்


சித்ரா பௌர்ணமி அன்று கடற்கரை மணலில் அமர்ந்து வானத்தில் பூத்த நிலவையும் அது கக்கிக் கொண்டிருக்கும் ஒளியையும் தென்றல் காற்றுடன் அந்த வேளையில் என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். கடல் அலையின் ஓசை அடங்கி ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சியளித்தன. கரையிலே கூட்டங் கூட்டமாக அமெரிக்க ஆண்களும் பெண்களும் நடனமாடிக்கொண்டிருந்தார்கள். சற்று தூரத்தில் அரண்மனைகளும், கோபுரங்களும் எழுந்தன. அவற்றின் உச்சியில் ஹாலிவுட் திரைப்படக் கொடி காற்றின் உதவியால் உல்லாசமாக பறந்து கொண்டிருந்தது.
இளமையுடன் கூடிய இனிமை ததும்பிய இசைக் கருவிகளிருந்து எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்கு தெரிந்த இடங்களிலெல்லாம் காமிராமேன்கள் படம் எடுப்பதை தொடர்ந்தார்கள். பல அமெரிக்க பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனமாடுவது கண்களுக்குத் தெரிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்கள் அனைவரும் என்னருகே வந்தார்கள் எனக்கோ இன்பம் கலந்த ஆச்சரியம்.
சார்லிசாப்ளின் , ஆல்பிரெட் ஹிட்ச்காக், வால்ட் டிஸ்ணி, ராஜ்கபூர், வி.சாந்தாராம், சத்யஜித்ரே அகிராகுரொசுவா, கிளார்க்கேபிள், ரித்விக் கட்டக், புரூஸ்லி இவர்களுடன் மணிரத்னம் ஆகியோர் என் அருகில் வந்து நாங்கள் எடுத்த படத்தை இன்னும் பார்க்கவில்லையே என்று சொல்லி விட்டுப் போனார்கள். அதன்பின் அந்த மேதைகள் உருவாக்கிய படங்களை பார்த்தேன். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்கிறது. சார்லி சாப்ளின் வாழ்க்கை மகாபாரதத்தை ஞாபகப்படுத்தியது. மணிரத்னம் படத்தை பார்க்க பார்க்க வியப்பு மிகுந்தது. சென்னை கடற்கரையில் கண்டது கனவா என்று மெய் சிலிர்த்தேன். கையில் உள்ள புத்தகம் மட்டும் மெய் என்று உணர்ந்தேன். கையில் பிடித்த பேனாவை மந்திரகோலாக கொண்டு எந்த எழுத்தாளன் இத்தகைய மேதைகளை இனம் கண்டு எழுதினான் என்று புத்தகத்தின் முன்பகுதிக்கு சென்றேன். வரிசை.கி.இராமச்சந்திரன் என்று எழுதியிருந்தது. எழுத்தை விற்றுப் பிழைக்க வந்தோர் மத்தியில் கருத்தைச்சொல்லும் காளமேகம் வரிசை.கி.இராமசந்திரன் என்று தோன்றியது.
- ஞானப்பிரகாசம்
சென்னை.

1 comment:

ananthu said...

புத்தகத்தை உடனே வாங்கி படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டுகிறது ...