Monday, February 11, 2008

தமிழ் திரைப்பட வரலாற்றில் சாதனை இயக்குநர்கள் 1931 - 1965

'தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை இயக்குநர்கள்' என்கிற இந்தப் புத்தகத்தின் தலைப்பே உள்ளடக்கத்தையும் புரியவைத்து விடுகிறது!. தமிழின் முதல் பேசும் படத்தை (1931) இயக்கிய எச்.எம்.ரெட்‌டீயில் துவங்கி, ' காவல் தெய்வம் ' படத்தை இயக்கிய (1969) டைரக்டர் கே.விஜயன் வரை, சாதனை இயக்குநர்கள் பலரைப் பற்றிய தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களின் புகைப்படங்களுடன், அந்தக் கால தமிழ்ப் படகளின் அபூர்வ ஸ்டில்களையும் தேடிக் கண்டுபிடித்துச் சேர்த்து இருப்பது பிரமிக்க வைக்கிறது.

இதில் விட்டுப்போன பல இயக்குநர்களைப் புத்தகத்தின் இறுதியில்
பட்டியலிட்டிருக்கிறார் தொகுப்பாசிரியர் வரிசை கி.ராமசந்திரன். இவர்களை பற்றியும், இந்த பட்டியலில் விட்டுப்போன இன்னும் சிலரைப் பற்றியும் கூடத் தகவல்கள் சேகரிக்கும் பணியில் ஈடு பட்டிருக்கிறாராம் ராமசந்திரன். சினிமா ஆர்வலர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயம் இது.
- ஆனந்த விகடன்

தமிழ் சினிமா இது வரை முதல் பேசும் படத்திலிருந்து என்னென்ன இடர்பாடுகளையும் வளர்ச்சிகளையும் வரலாறு ஆக்கியிருக்கிறது என்பதனை இப்புத்தகத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. மொழி இன பேதமின்றி நமது முன்னோடிகள் ஆற்றியுள்ள பணிகளை திரைப்பட ஆர்வலர்களும் மற்றவர்களும் தெரிந்துக்கொள்வது அவசியம். மனித வாழ்க்கை பல உன்னதங்களை கொண்டுள்ள மாதிரி நமது தமிழ் சினிமா வரலாற்றிலும் பல உன்னதங்கள் நிகழ்ந்துள்ளன. இப்புத்தகம் தமிழ், வரலாறு, இயக்குநர்கள் மூன்றையுமே உள்ளடக்கியதாக உள்ளது.
தமிழ் சினிமா ஒவ்வொரு நிலையிலும் அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தொழில் நுட்பத்திலும் பல விதமான மாறுதல்களை அடைந்திருக்கிறது.

சமூகப்பொறுப்புடன் இயங்குபவன்தான் கலைஞனாக முடியும். அதுவும் திரைப்படம் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான கலையாக இருக்கும் பட்சத்தில் சமூக சிந்தனையுடனும் பொறுப்புடனும் இயங்குபவனுக்குத்தான்
தன்னை திரைப்பட கலைஞன் எனச் சொல்லிக்கொள்ள தகுதியும் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு எத்தனையோ முன்னோர்கள் தங்கள் பொருளாதாரத்தையும் உழைப்பையும் கொடுத்து வளர்த்தது போக சில அரிதான சிந்தனையாளர்களும் சமூக நோக்கில் அவ்வப்போது தமிழ் சினிமாவை வளர்த்திருக்கிறார்கள் .

1919 லிருந்தே தமிழ் நாட்டில் சினிமா உருவாக்கப்பட்டு வந்தாலும் அது அடையாளத்தை எடுத்துக் கொண்டது தமிழ் மொழியை உச்சரித்ததினால்தான். இப்போதும் கூட நாம் தமிழைப்பேசும் வரைதான் தமிழர்கள் . தமிழை பேசும் வரைதான் இது தமிழ்நாடு. தமிழை பேசும் வரைதான் அது தமிழ் சினிமா. 1931ம் ஆண்டுதான் தமிழில் முதல் பேசும் சினிமா படைக்கப் பட்டதால் தமிழ்
சினிமாவின் வயது அவ்வாண்டிலிருந்து கணக்கிலெடுக்கப்பட்டுள்ளது.

1965இல்தான் தமிழ் சினிமாவின் தீவிர சினிமா உருவானது. அது வரை படைக்கப் பட்ட படங்கள் பொழுது போக்கிற்காக மட்டும் உருவாக்கப் பட்டதாக இருந்தாலும் சுதந்திர வேட்கையை கிளரச் செய்து மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டின. கதை சொல்லும் போக்கில் சமூக பிரச்னைகளையும் முன் வைத்தன. கதாநாயகர்களை முன் வைத்து படமாக்கப்பட்ட படங்களுக்கு நடுவே இந்த நேரத்தில்தான் தீவிர சினிமாவுக்கான அடையாளங்களோடு முயற்சி செய்யப்பட்ட படம் 'உன்னை போல் ஒருவன்' .எழுத்தாளர் ஜெயகாந்தன் தன்னுடைய ஒரு நாவலை யேயே திரைப்படமாக்கி எவ்வளவு இயக்குநர்கள் இருந்தாலும் முதல் முறையாக தீவிர சினிமாவை தமிழகத்தில் அறிமுக படுத்திய இயக்குநர் என்கிற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.

'தமிழ் திரைப்பட வரலாற்றில் சாதனை இயக்குநர்கள் :1931-1965' எனக் குறிக்கும் விதத்தில் உணர்த்துபவை : எந்தெந்த ஆண்டுகளில் எந்தெந்த இயக்குநர்கள் தங்களின் முதல் படைப்பை படைத்தார்களோ அதன் படி அவர்களின் பெயரோடு ஆண்டும் பங்கெடுத்து கொள்கிறது.
- தங்கர் பச்சான்

Wednesday, February 6, 2008

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்



தமிழ்த்திரை உலகில் ஜொலித்த திரைப்பட இயக்குநர்களின் திறனாய்வு என்று இப்புத்தகத்தைக் கூறலாம். இது, முதல் பகுதியைத் தொடர்ந்து வந்துள்ள இரண்டாம் பாகப் புத்தகம் ஆகும். இப்புத்தகம் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி எல்லாத் தரப்பினரையும் கவரும் வண்ணம் அமைந்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு.

வரிசை.கி.ராமச்சந்திரனின் இம்முயற்சி வெற்றி பெறவும் கூடிய விரைவில் திரைப்படத்தை இயக்கி வெற்றி காணவும் நெஞ்சார வாழ்த்துக்கள்.
- ரவி.கே.சந்திரன்
திரைப்பட ஒளிப்பதிவாளர்.

உலக கலைகளிலேயே இன்று தலைசிறந்து விளங்குவது,திரை அரங்கில் திரையில் தோன்றும் கலையே.

இயல், இசை , நாடக்கலையே திரைக்கலைக்கு ஞானத் தாய் கலையாகும். இன்று திரைக்கலை விஞ்ஞான யுக்தியால் பலமடங்கு வளர்ச்சி பெற்று வானத்தின் நட்சத்திரததோடு மோதபார்க்கிறது.

இதற்கெல்லாம் மேலே உள்ள சினிமா மேதை தாமஸ் ஆல்வா எடிசன் என்ற சூரியனை நாம் நினைவில் கொள்ளாமல் இருக்க முடியாது.

இந்நூலின் ஆசிரியர் வரிசை.கி.ராமச்சந்திரன் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக இருந்துகொண்டே எவ்வளவு சிரமப்பட்டு பழைய கால தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் தெளிவான வரலாறைச் சேகரித்திருப்பார் என்று நூலைப் படித்துப் பார்த்தாலே புரிகிறது.

நடராஜன் முதலியார் முதல் , புட்டன்னா , பீம்சிங் என்று இயக்குநர்களின் வரலாறு வலம் வருகிறது. அவர்கள்பட்ட வேதனை - சோதனை, அதன்பின் வெற்றி என்று புகைப் படங்களோடு எழுதி இருக்கிறார். திரையுலகில் இருந்தவரும் - இருப்பவரும் - இனி இருக்கப் போகிறவரும் இந்நூலைப் படிக்க வேண்டும். ஏனென்றால் திரையுலகில் இருப்பவர்களுக்கே பழைய கால இயக்குநர்களைப் பற்றித் தெரியாத விசயங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

எனவே இவரின் இந்தப் பணியை மனதாரப் பாராட்டுவதோடு மேலும் இது போன்ற நூல்களை எழுதும்படியும் , கூடிய விரைவில் திரைப் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி அடையவும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

- எஸ்.ஜே.சூர்யா

Saturday, February 2, 2008

உலகப் புகழ் பெற்ற திரை நட்சத்திரங்கள்


சித்ரா பௌர்ணமி அன்று கடற்கரை மணலில் அமர்ந்து வானத்தில் பூத்த நிலவையும் அது கக்கிக் கொண்டிருக்கும் ஒளியையும் தென்றல் காற்றுடன் அந்த வேளையில் என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். கடல் அலையின் ஓசை அடங்கி ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சியளித்தன. கரையிலே கூட்டங் கூட்டமாக அமெரிக்க ஆண்களும் பெண்களும் நடனமாடிக்கொண்டிருந்தார்கள். சற்று தூரத்தில் அரண்மனைகளும், கோபுரங்களும் எழுந்தன. அவற்றின் உச்சியில் ஹாலிவுட் திரைப்படக் கொடி காற்றின் உதவியால் உல்லாசமாக பறந்து கொண்டிருந்தது.
இளமையுடன் கூடிய இனிமை ததும்பிய இசைக் கருவிகளிருந்து எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்கு தெரிந்த இடங்களிலெல்லாம் காமிராமேன்கள் படம் எடுப்பதை தொடர்ந்தார்கள். பல அமெரிக்க பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனமாடுவது கண்களுக்குத் தெரிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்கள் அனைவரும் என்னருகே வந்தார்கள் எனக்கோ இன்பம் கலந்த ஆச்சரியம்.
சார்லிசாப்ளின் , ஆல்பிரெட் ஹிட்ச்காக், வால்ட் டிஸ்ணி, ராஜ்கபூர், வி.சாந்தாராம், சத்யஜித்ரே அகிராகுரொசுவா, கிளார்க்கேபிள், ரித்விக் கட்டக், புரூஸ்லி இவர்களுடன் மணிரத்னம் ஆகியோர் என் அருகில் வந்து நாங்கள் எடுத்த படத்தை இன்னும் பார்க்கவில்லையே என்று சொல்லி விட்டுப் போனார்கள். அதன்பின் அந்த மேதைகள் உருவாக்கிய படங்களை பார்த்தேன். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்கிறது. சார்லி சாப்ளின் வாழ்க்கை மகாபாரதத்தை ஞாபகப்படுத்தியது. மணிரத்னம் படத்தை பார்க்க பார்க்க வியப்பு மிகுந்தது. சென்னை கடற்கரையில் கண்டது கனவா என்று மெய் சிலிர்த்தேன். கையில் உள்ள புத்தகம் மட்டும் மெய் என்று உணர்ந்தேன். கையில் பிடித்த பேனாவை மந்திரகோலாக கொண்டு எந்த எழுத்தாளன் இத்தகைய மேதைகளை இனம் கண்டு எழுதினான் என்று புத்தகத்தின் முன்பகுதிக்கு சென்றேன். வரிசை.கி.இராமச்சந்திரன் என்று எழுதியிருந்தது. எழுத்தை விற்றுப் பிழைக்க வந்தோர் மத்தியில் கருத்தைச்சொல்லும் காளமேகம் வரிசை.கி.இராமசந்திரன் என்று தோன்றியது.
- ஞானப்பிரகாசம்
சென்னை.

சுடர் வீசும் திரை நட்சித்திரங்கள்


தமிழ்த் திரையுலகில் பிரகாசித்த பதினான்கு திரைப்பட நட்சத்திரங்களின் திறனாய்வு என்று இந்தப் புத்தகத்தைப் பெருமையோடு கூறலாம். நண்பர் வரிசை.கி.இராமசந்திரன் திரைப்படத் துறையில் இணை இயக்குநாரக இருந்துகொண்டே திரைப்படத் துறை பற்றி இவர் எழுதும் பத்தாவது நூல் என்று நினைக்கும்போது இவரின் உழைப்பை எப்படிப் புகழ்வது என்றே தெரியவில்லை.
அமரர் திரு.சிவாஜிகணேசனின் முதல் பட நாயகி திருமதி. பண்டரிபாயின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம். அமரர் திரு. எம்.ஜி.ஆரின் 18 திரைப்படங்களுக்கு துணை இணை இயக்குநராகப் பணியாற்றியவர்தான் இடிச்சப்புலி செல்வராஜ் என்ற செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுபோன்று திரு.கே.ஆர். இராமசாமி, திருமதி. அஞ்சலி தேவி, திரு.ஏ.கே.வீராசாமி, திரு.சித்தூர் வி.நாகையா, திருமதி .பத்மினி, திரு.எஸ்.வி.ரங்கராவ், திருமதி. பி. சரோஜாதேவி, திரு.கே.ஏ.தங்கவேலு, திரு. ரவிசந்திரன், கடைசியாக திரு.பிரபு என்று அனைத்து நடிகர்கள், நடிகைகள் பட்ட வேதனை சோதனை மற்றும் படப்பட்டியல் என்று தெளிவாக விவரிக்கிறது இப்புத்தகம். திரைப்பட நூல்கள் எழுதி சாதனை புரிந்தது போல இனிய நண்பர் வரிசை.கி.இராமசந்திரன் விரைவில் திரைப்படத்தை இயக்கி வெற்றியடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்.
- சதிஸ்குமார்,
ஸ்டார் பிலிம் இன்ஸ்டிடீயூட்.

Tuesday, January 29, 2008

தமிழ் திரை மலரும் நினைவுகள் - தொகுதி 2


செல்லுலாயிட் ஊடகம் என்னும் சினிமாத் துறை அது தொடங்கிய காலத்திலிருந்து படிப்படியாகப் வளர்ந்து இன்றைக்கு டிஜிட்டல் சினிமாவாக பரிணமித்துள்ளது.

சினிமா என்கின்ற திரைத்துறை என்பது ஒரு பொழுப்போக்கு சாதனம் என்பதையும் மீறி மானுட சமுதாயத்தின் உணர்ச்சி வெளிப்பாடு ஆகவும் மக்களுக்கு அறிவு புகட்டும் பாடமாகவும்அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையில்லை.அதே நேரத்தில் திரையின் மூலம் தீமை செய்கிற செய்திகளும் உண்டுதான். அத்திரை மக்களும் மக்களுக்கான ஆட்சியும் கடிந்தொழித்தலும் கட்டாய மாகிறது.

அந்த வகையில் நமது தமிழ்த்திரையுலகின் திருப்பதையும் வளத்தையும், சீர்மையயும், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றோர் மேம்படுத்தியிருப்பது கண்கூடு.


அங்ஙனம் 'தமிழ்த்திரை மலரும் நினைவுகள் தொகுதி -2' என்னும் இந்த நூலில் திறமையாளர்களின் தொழில்நுட்பங்களைத் தமது செழுமையான நடையில் திரு.வரிசை கி.ராமச்சந்திரன் அவர்கள் விளக்கியுள்ளார்கள். அவர் திரையுலகில் விரைவில் சிறந்த இயக்குநராக விளங்க இருப்பவர். அவரால் எழுதப் பெற்ற இந்த நூல் எல்லோராலும் விரும்பிப் படிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையயும் கொள்கிறோம்.


- பதிப்பகத்தார்

Friday, January 25, 2008

தமிழ்த்திரை மலரும் நினைவுகள் தொகுதி 1


தமிழ்த் திரைப்பட வரலாறு மிகவும் சுவாரசியமானது. நட்சத்திரங்களும் திரையுலகம் தொடர்பான தொழில்நுட்பக் கலைஞர்களும் நம் பாராட்டுக்கு உரியவர்கள். அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் அவர்களைப் பற்றி வரும் செய்திகள் விரும்பிப் படிக்கப்படுகின்றன. சில சமயங்களில் விவாதிப்கப்படுகின்றன.

திரையுலகப் பிரமுகர்கள் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டுத் தரப்படும்பொழுது அதில் ஒரு முழுமை இருக்கிறது. மேலும் நடிப்புப் பயிற்சிக்கெனத் தனிக்கல்வி நிலையங்ளும் தோன்றிவிட்ட இந்தக் காலத்தில் திரைத்துறையினர் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் வாசகர்களுக்கும் அந்தத் துறையில் நுழைய விரும்புவர்களுக்கும் பெருமளவு உதவியாக இருக்கும். அந்த வகையைச் சேர்ந்தது வரிசை கி. ராமச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள 'தமிழ்த்திரை மலரும் நினைவுகள் ' என்ற இந்த நூல்.

இதன் முதல் பாகத்தில் இடம் பெறுபவர்கள் திருவாளர்கள் கலைஞர் மு.கருணாநிதி, சீர்காழி கோவிந்தராஜன், சிவாஜி கணேசன், டி.எம்.சௌந்தராஜன், கலைஞானம், தூயவன் மற்றும் கமல்ஹாசன்.

இவர்களது கலை உலகப் பணி மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி நாம் அனைவரும் ஓரளவுக்கு அறிவோம் என்றாலும் இங்கே நூலாசிரியர் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகள் பலருக்கு புதியவை என்றே சொல்ல வேண்டும்.
திரைத்துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமே அறிந்துள்ள தகவல்கள் இங்கே எல்லா வாசகர்களுக்கும் கிடைக்கின்றன.

பல தகவல்கள் திரைத்துறை பற்றி ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். நூலின் நடை மிகவும் எளிமையாக இருக்கிறது.

சம்பவங்கள் சுவாரசியமானவை. ஒரே மூச்சில் படித்துவிடலாம். மீண்டும் படிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டும் நூல் இது.

தமிழ்த்திரை உலகம் பற்றிய வரலாற்று நூல்கள் எழுத விரும்புபபவர்களுக்கு பயனுள்ள புத்தகம் என்ற வகையில் இது பாராட்டுக்குறியது. பாராட்டுகிறேன்.


- கலைமாமணி நல்லி குப்புசாமி.